பெரம்பலூர்: பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலையை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சரின் ஆய்வு
அங்கு தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், ஆகியவற்றின் உற்பத்தித்திறன், தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, பெரம்பலூர் துறைமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் குளிர்வூட்டும் நிலையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதன்பின்னர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுடான ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், பால் விற்பனையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் பவுடர் தாயாரிப்பு
தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற ஏற்கனவே பாடாலூரில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் வெண்ணெய், நெய் மட்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பால் பவுடரும் சேர்ந்து தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும், திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திலிருந்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை பிரித்து தனி ஒன்றியமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன், அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கருணாநிதியும் கனிமொழியும்: வைரலாகும் சிறை வாசல் புகைப்படம்!