இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் கடன் வழங்கும் திட்டத்தினை மாநில அரசின் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்திவருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற www.msmeonline.tn.gov.in/ uyegp என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திட்ட இலக்காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2020 -21 ஆம் நிதி ஆண்டில் எழுபது நபர்கள் பயன் பெற ரூபாய் 50 லட்சம் மானியம் வழங்க தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2021 மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை கடன் வழங்கப்படும். கடன் திட்ட பயனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து மாநில அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் மேற்காணும் இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க உற்பத்திப் பிரிவில் ரூபாய் 10 லட்சம் வரையிலும் வியாபாரம் மற்றும் சேவை பிரிவில் ரூபாய் 5 லட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யும்.
திட்ட மதிப்பீட்டில், 25 விழுக்காடு மானியமாக அதிகபட்சமாக ரூபாய் ஓரு லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழ்நாடு அரசு கடனாக வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். திட்டத்திற்கு விண்ணப்பிப்போரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஐந்து லட்சம் வரை இருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.