பெரம்பலூர் மாவட்டம் சீராநத்தம் கிராமத்தில் அனிதா என்ற இளம்பெண் வசித்துவந்தார். இவரது கணவர் பழனிவேல் சிங்கப்பூரில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அனிதா, டிக் டாக் மீது அதிக மோகம் கொண்டதால், தினமும் புதுப் புது காணொளி பதிவேற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இவரது ஒரு குழந்தைக்குக் காலில் அடிபட்டதை அறிந்தும், டிக் டாக் மோகத்தால் குழந்தைகளைச் சரிவரக் கவனிக்கவில்லை என பழனிவேல், அனிதாவைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அனிதா வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியிருக்கிறார். அதோடு நில்லாமல், நஞ்சருந்துவதை டிக் டாக் செயலி மூலம் படம்பிடித்து பதிவேற்றம் செய்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அனிதாவைத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சைப் பலனின்றி அனிதா உயிரிழந்தார். டிக் டாக் மோகம் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.