பெரம்பலூர் மாவட்டம் 7ஆவது வார்டு மதனகோபாலபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் முதல் தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்(47). இவரது மனைவி மலர்கொடி(45). இவர்களுக்கு வெங்கடேஷ்(24) என்ற மகன் உள்ளார். ராமகிருஷ்ணன் அதே பகுதியில் உள்ள சினிமா திரையரங்கில் வேலை செய்து வந்த நிலையில், சமீப காலமாக வேலைக்கு செல்லாமல், குடி பழக்கத்திற்கும் அடிமையாகி, வீட்டிலேயே இருந்து வந்தார்.
இவரது மகன் வெங்கடேஷ் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில், தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ராமகிருஷ்ணன், காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டிற்கு வரக்கூடாது என்று மகன் வெங்கடேஷனிடம் கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரது மனைவி மலர்க்கொடி, மகன் வெங்கடேஷூக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டை எழுதி தருமாறு, ராமகிருஷ்ணனிடம் இருவரும் கேட்டுள்ளனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பூலாம்பாடியில் இருந்து நேற்று (மார்ச் 25) பாரதிதாசன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்த வெங்கடேஷூக்கும், ராமகிருஷ்ணனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் காயமடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் பின்பகுதியில் சரிந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வெங்கடேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை தொடர்ந்து மலர்க்கொடியும் தலைமறைவாகி விட்டார். இன்று (மார்ச் 26) காலையில் அக்கம் பக்கத்தின் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது ராமகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து சென்று ராமகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அவரது மனைவி மலர்கொடி, மகன் வெங்கடேஷ் ஆகிய வரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புகார் அளிக்க வந்தவருக்கு போலீசாரே மிரட்டல்? - புகாரை திருத்த மிரட்டியதாக வாக்குமூலம்!