கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திருச்சி தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போதை ஆசாமி ஒருவர், அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் அந்த நபரை துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் போதை ஆசாமி கொண்டு வந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் ரூ. 12லட்சத்து 97 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருச்சியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும், கடந்த 20ஆம் தேதி ஏடிஎம் மையத்திற்கு கொண்டு சென்ற பணத்தை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்ததும் தெரியவந்தது.