பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 12ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதோடு, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டபோது, வெங்காயத்திற்கு விவசாயிகள் காவல் இருந்த சம்பவங்களும், அவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் வயலிலிருந்து திருடிச் செல்லும் சம்பவங்கள் அரங்கேறியது.
100 கிலோ வெங்காயம் திருட்டு
அந்த வகையில் செட்டிகுளம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வயல்களில் பட்டறை அமைத்து இருப்பு வைக்கப்பட்டு இருக்கக்கூடிய வெங்காயம் அடிக்கடி திருடு போகிட்டு இருந்தது. இந்நிலையில், இன்று (ஆக.24) அதிகாலை குன்னம் அருகேவுள்ள ஒதயம் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான வயலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ வெங்காயத்தை திடிச்சென்றுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக நில உரிமையாளருக்குத் தகவல் கொடுத்ததோடு ராமுவை பிந்தொடர்ந்து சென்றனர். திருடிய வெங்காயத்தை ராமு பெரம்பலூர் சந்தையிலுள்ள காய்கறி வியாபாரிகளிடம் விற்க முயற்சித்தபோது அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
இதனைத் தொடர்ந்து ராமுவிடம் விசாரித்தபோது அவர் பல்வேறு இடங்களில் சின்ன வெங்காயம் திருடி, அதனை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், ராமுவையும் அவர் திருடிச் சென்ற வெங்காயம், அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை பாடாலூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராமுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு தக்க தண்டனை வழங்குவதோடு, இந்த பகுதியில் சின்ன வெங்காயம் திருடு போவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 சவரன் நகை, கார் திருட்டு - போலீஸ் விசாரணை