தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து தேர்தல் பரப்புரை இன்று நடைபெற்றது. இதில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வானொலி திடலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், “காங்கிரஸ் - திமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரு ஊழல் நிறைந்த கூட்டணி. அது ஒரு மூழ்கும் கப்பல். இந்த கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் ஊழலில் தொடர்புள்ளவர்கள். கலாசாரம், பண்பாடு, ஆன்மீகம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கிய தமிழ்நாட்டை, முதலில் ஆங்கிலேயர்களும், பின்னர் காங்கிரஸும் நிர்மூலமாக்கியது. 52 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி நாட்டை ஆண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக காங்கிரஸ் பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறது. இந்த காங்கிரஸ் கட்சிதான் கலைஞர் அரசை கலைத்தது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது கூடாநட்பு கேடாய் முடியும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே கூறியுள்ளார். மத்திய அரசு 5 ஆண்டுகளாக மக்களிடையே பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிமுக - பாஜக உடன் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, ஒரு வலுவான கூட்டணி. இந்த கூட்டணி மூலம் தமிழகமும், தேசமும் வளர்ச்சியடையும். பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான ரயில்வே திட்டத்தினை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னும் மூன்று மற்றும் நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், என்றார்.