பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ நீக்கம் குறித்து தேசிய ஒற்றுமை பிரசார மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கம் குறித்து எந்த ஒரு மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் திமுகவும், அதன் இலவச இணைப்புகளான தோழமைக் கட்சிகளும்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
சட்டப்பிரிவை நீக்கியதால் இனி 27 விழுக்காடு இட ஒதுக்கீடு காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும். இதனை எதிர்க்கும் திமுகதான் சமூகநீதிக்கு எதிரான சக்தி. இலவச இணைப்புகள் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர்களும் சமூகவிரோதிகள். இவர்கள் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுகிறவர்கள். சமூக நீதி என்பது இவர்களது கொள்கை அல்ல; ஓட்டு வாங்கும் தந்திரம்” என்றார்.