பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
இதனிடையே கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதனிடையே எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிவரும் கணிதப் பட்டதாரி ஆசிரியர் பைரவி என்பவர் செப்டம்பர் 5ஆம் தேதி தன்னுடைய சொந்த செலவில், பத்தாம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு 16 பேருக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்தார்.
இதனால் அதே பள்ளியில் படிக்கும் தமிழ் வழிக்கல்வியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பு மஞ்சரி, கணித ஆசிரியர் பைரவி, ஆசிரியர்கள் சுரேஷ், செல்வராஜ் ஆகியோர் கலந்து ஆலோசித்து மேலும் உதவும் மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களோடு சேர்ந்து ரூபாய் 1.5 லட்சம் நிதி திரட்டினர்.
இதன்மூலம் 28 மாணவர்களுக்கு (தமிழ்வழிக் கல்வியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்) இணைய வழிக்கல்வி மூலம் கல்வி பயில்வதற்கு ஏதுவாக அமையும் ஸ்மார்ட்போன்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன.
இதனை மாவட்ட கல்வி அலுவலர் மாரி மீனாள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.