பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், ஐஜேகே நிறுவனருமான பாரிவேந்தர் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நான் தேர்தல் வாக்குறுதியாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து தலா 50 பேர் வீதம் மொத்தம் 300 பேருக்கு இலவச உயர் கல்வி அளிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தேன்.
இதை தற்போது நிறைவேற்றும் வகையில் இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டணிக் கட்சியினரை கொண்ட குழு மூலம் பயனாளிகளை தேர்வு செய்து எஸ்.ஆர்.எம். குழும கல்வி நிறுவனங்களில் முற்றிலும் எவ்வித கல்வி கட்டணமும் இன்றி, இலவச விடுதி, உணவு ஆகியவற்றுடன் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இதேபோல் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தேன். இதுவும் அடுத்த மூன்று மாதத்தில் நிறைவேற்றப்படும். தற்போதும் தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதை தீர்க்கும் வகையில் 100 கிராமங்களைத் தேர்வு செய்து அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்தல், அல்லது டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் போன்றவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நான் தனிப்பட்ட முறையில் கொடுத்த வாக்குறுதிகள் ஆகும். இதை எனது சொந்த பணத்தில் இருந்து தற்போது நிறைவேற்ற உள்ளேன். அரசு செய்யவில்லை என்றாலும் நான் செய்வேன் என்ற நம்பிக்கையில் தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர்.
அந்த நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவேன். எனது தொகுதி நிதியான ரூ.5 கோடி ரூபாயை ஆண்டுதோறும் மிச்சமில்லாமல் தொகுதிக்கு செலவிடுவேன். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை பெரம்பலூர் தொகுதிக்கு கொண்டுவர நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என்பது எனது நிலைப்பாடு” என்றார்.