பெரம்பலூர் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிலத்தரகர் ரவிச்சந்திரன். தனது நண்பர் மூலம் அறிமுகமான பாப்பான்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சுரேஷ், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ரவிச்சந்திரனிடம் ஒரு கிலோ தங்கத்தை 38 லட்சத்திற்கு வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதை நம்பிய நிலத்தரகர், முன்பணமாக தன்னிடமிருந்த 18 லட்ச ரூபாயை சுரேஷிடம் கொடுத்து, பின் இரண்டு லட்ச ரூபாயை அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், சுரேஷ் மீண்டும் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு, நீங்கள் கொடுத்ததில் இரண்டு லட்சம் கள்ளநோட்டுகளாக உள்ளது என்றும், அதனால் உடனடியாக இரண்டு லட்சத்தை எனது வங்கி கணக்கில் செலுத்தும்படியும் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ரவிச்சந்திரனும், சுரேஷின் வங்கி கணக்கிற்கு மேலும் இரண்டு லட்சத்தை அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, சில நாட்களுக்கு பின் சுரேஷ் மீண்டும் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு, ஒரு கிலோ தங்கம் தற்போது 52 லட்சமாக அதிகரித்து விட்டது. அதனால் மீதமுள்ள தொகையை உடனடியாக அனுப்புமாறு கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ரவி, பணம் தரமுடியாது என்றும், ஏற்கனவே கொடுத்த ரூ.22 லட்சத்தை திருப்பி கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சுரேஷ், என்னிடம் கொடுத்த பணத்திற்கு ஆதாரம் கிடையாது. அதனால் உங்களுடைய பணத்தை திரும்ப தர முடியாதென கோபமடைந்த நிலத்தரகர் ரவிச்சந்திரன் தனது நண்பர்களின் உதவியுடன் காரில் கடத்திச் சென்று, அவரிடம் வலுக்கட்டாயமாக வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தன்னை கடத்தி மிரட்டியதாக நிலத்தரகர் உட்பட, அவரது நண்பர்கள் பாஸ்கர், வாழவந்த குமார், முத்துக்குமரன், முத்தையா ஆகியோர் மீது சுரேஷ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், நிலத்தரகர் ரவிச்சந்திரன், பாஸ்கர், வாழ வந்த குமார், முத்துக்குமரன் ஆகியோரை ஆள் கடத்தல் பிரிவின் கீழ் கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான முத்தையாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின், தன்னிடம் பணத்தை ஏமாற்றியதாக் ரவிச்சந்திரன் காவல் துறையில் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கதவு, குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைக்கூட விட்டுவைக்காத திருடன்!