விவசாயத்தை முதன்மையாக கொண்டது பெரம்பலூர் மாவட்டம். வானம் பார்த்த பூமியான இம்மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசனம் கிடையாது. மழையை நம்பியே சாகுபடி செய்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சிறு தானிய வகைகள் உள்ளிட்டவைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. சின்ன வெங்காயத்தை பொருத்தவரையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பாடாலூர், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்தாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயத்திற்கு மாற்றாக தற்போது சம்பங்கிப்பூக்கள் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். சம்பங்கி பூக்களுக்கு குறைந்தளவு தண்ணீர் தேவைப்படுவதால் 6 மாத காலத்தில் விளைச்சல் கொடுக்கும் என்பதால், தற்போது சாகுபடி செய்து வருகின்றனர்.
அறுவடை செய்யப்படும் சம்பங்கி பூக்கள் பெரம்பலூர் திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பூ சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது வைகாசி மாதம் தொடங்கிவிட்ட காரணத்தினால் சம்பங்கிப் பூக்கள் நல்ல விலைக்கு போகும் என்பதால் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.