விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் மழையை நம்பியே பெருவாரியான மானாவாரி நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு, பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்த காரணத்தினால் தற்போது விதைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர் விவசாயிகள்.
நிலத்தை உழுது தயார் நிலையில் வைத்துள்ள விவசாயிகள் மழைக்காக காத்திருந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினால் பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, அய்யலூர், சிறுவாச்சூர், நெற்குணம், வேப்பந்தட்டை, குன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மானாவாரி மக்காச்சோள பயிரிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் தற்பொழுது விதைப்பு பணிகள் தொடங்கியுள்ள விவசாயிகள் எதிர் வருகின்ற பருவமழை கை கொடுத்தால் மட்டுமே சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக அமையும் எனத் தெரிவிக்கின்றனர்.