பெருவாரியான மானாவாரி நிலங்களைக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் மழையை நம்பி, பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்டவைகள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காய்கறி பயிர் சாகுபடிக்கு இரண்டாயிரத்து 500 ரூபாயினைப் பெற தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
காய்கறி பயிர் சாகுபடியை (கத்தரி, தக்காளி, வெண்டை, வெங்காயம் மற்றும் கீரை வகைகள், முருங்கை முள்ளங்கி அவரை கொடி வகை காய்கறிகள்) ஆகியவற்றை பயிரிடுவதற்கு ஊக்குவிப்பதற்காக பெரம்பலூர் தோட்டக்கலை துறைக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைப்பருவ காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் இரண்டாயிரத்து 500 வீதம் ஊக்கத் தொகையாக அதிகபட்சம் இரண்டு ஹெக்டேருக்கு மானியம் பெறலாம். இந்தத் திட்டங்களில் பயன்படும் காய்கறி, விதை வாங்கியதற்கான பட்டியல், ஆதார் நகல், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, முன்னதாக காய்கறி சாகுபடி செய்ததற்கான அடங்கல், கணினி சிட்டா ஆவணங்களுடன் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் வட்டாரங்களில் உள்ள வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.