முதலமைச்சர் பழனிசாமி தமிழ்நாடு அரசு 110 விதியின் கீழ் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், சுமார் ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
பின்பு, பிப்.9ஆம் தேதி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீது மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பாக விண்ணப்பிக்கப்பட்ட வேளாண் கடன்களுக்கு இதுவரையில் பணம் பட்டுவாடா செய்யவில்லை. பணம் பட்டுவாடா செய்யாதவர்களுக்கு தள்ளுபடி இல்லை என்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இதனைக் கண்டித்து, வேளாண் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இதையும் படிங்க: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா