பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் அமிர்தலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்த ஆண்டு தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் ஆதாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்", என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 27 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப் புற மக்கள் மோசமான நிலையில் உள்ளனர்.குடிநீர் பிரச்னை, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உள்ளதாக? இத்தகைய திட்டங்களை தமிழக அரசு நிறுத்தி வைப்பது கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் செயல். உடனடியாக மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்", என வலியுறுத்தினார். மேலும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.