இந்திய அரசு சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விளையாட்டுத்துறை சார்பாக வழங்கப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2021 ஆம் ஆண்டிற்கான பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்கள், கலை, இசை, ஓவியம், சிற்பம், புகைப்படம், சினிமா, நாடகம் ஆகிய துறைகளில் தேசிய அளவில் தனித் திறமைகளை நிரூபித்த நபர்களாக இருக்க வேண்டும்.
சமூக சேவை, பொது வாழ்வியல், அரசியல் ஆகியவற்றில் சேவை புரிந்தவர்கள் அறிவியல், விண்வெளி, பொறியியல், அணு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் பொருள் சார்ந்த ஆய்வு ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இலக்கியம், இதழியல், கற்பித்தல், புத்தகப் பதிப்பகம் கல்வியில் சீர்திருத்தம் படைத்தவர்களும், அரசு ஊழியர்கள் குடிமைப் பணிகள் மூலம் சிறப்பான நிர்வாகம் படைத்தவர்களும், விளையாட்டில் சாகச விளையாட்டு பதவி உயர்வு பெற்று சாதனை படைத்தவர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், மலையேற்றம், விளையாட்டு துறைகளை மேம்படுத்தியவர்கள், இந்திய கலாச்சாரம், மனித உரிமைகள் பாதுகாப்பு, வன பாதுகாப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு போன்ற துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கும் பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட உள்ளது.
பத்ம விருதிற்கான விண்ணப்பம், முக்கிய விவரங்கள் குறித்த தகவல்களை இணையதள முகவரியான www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகலினை 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு, பெரம்பலூர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சென்று செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.