பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று சக்கர நாற்காலி கேட்டு மனு கொடுத்த 10 நிமிடத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய மாவட்ட ஆட்சியரின் செயல் அங்கிருந்த பொது மக்களிடையே வெகுவாக பாராட்டைப் பெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சிறு வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண், தேவராணி. இவர் தனது இயலா நிலையினை எடுத்துக் கூறி, நடக்க இயலாத நிலையில் தனக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட வண்டி கேட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: மத உணர்வை தூண்டும் வகையில் பேசி 'சஸ்பெண்ட்' ஆன காவலர்... சம்பவத்தின் பின்னணி என்ன?
அவரின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் கற்பகம், மனு கொடுத்த 10 நிமிடத்திற்குள்ளே மாற்றுத் திறனாளியான தேவராணிக்கு மூன்று சக்கர வண்டியினை வழங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தேவராணி தனது கோரிக்கைக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகத்திற்கு மகிழ்ச்சி பொங்க தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து பேசிய மாற்றுத்திறனாளி தேவராணி, "நான் கடந்த 10 வருடங்களாக எதிர்பாராத விபத்தின் காரணமாக மாற்றுத் திறனாளியாக உள்ளேன். ஏதேனும் கடைகள் அல்லது எங்காவது நடந்து செல்வதற்கு மிகவும் கடிணமாக இருந்தது. எனக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட வண்டி வாங்க போதிய வசதி இல்லாததால், பெரும் அவதிப்பட்டு வந்தேன். அப்போது அக்கம்பக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு கொடுத்தால் அவர் உதவிக்கரம் நீட்டுவார் எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட்7) மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து என் இயலாமை குறித்து மனு அளித்தேன். மனு கொடுக்கப்பட்ட 10 நிமிடங்களில், என் மனுவை விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் எனக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட வண்டியைக் கொடுத்தார். என் இயலாமையை புரிந்து என் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றி" என உருக்கமாகக் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலர் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல் பொது மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.
இதையும் படிங்க: ஆம்பூரில் ஆன்லைன் செயலி மூலம் பண மோசடி.. பணத்தை இழந்த பொதுமக்கள் போலீசில் புகார்..