தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் சீரமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், இரண்டாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைந்து நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை ஏரியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டிலும், மேலக் குணங்குடி கிராமம் கீர வாடி ஏரியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தழு தாழை ஏரியில் ஒரு கி.மீ நீளத்திற்கு வரத்து வாய்க்கால் தூர் வாருதல், 33.60 மீ நீளத்திற்கு புதிய கடக்கால் கட்டுதல் 30 மீ நீளத்திற்கு அணைக்கட்டு பழுது பார்த்தல், ஏரியில் 40 எல்லைக்கற்கள் நடுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல் கீர வாடி ஏரியில் 2 கிமீ நீளத்திற்கு வரத்து வாய்க்கால் தூர் வாருதல் 30 மீ நீளத்திற்கு தடுப்பு சுவர் கட்டுதல் 13.மீ நீளத்திற்கு கடக்கால் பழுது பார்த்தல், 36 எல்லைக்கற்கள் நடுதல் உள்ளிட்ட குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த குடிமராமத்து பணிகளை ஆட்சியர் வே.சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.