பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2020 - 21ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பரதநாட்டியம், குரலிசை, தேவாரம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை சிறப்புடன் செயல்பட்டுவருகிறது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2020 - 21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.
பரதநாட்டியம், குரலிசை, தேவாரம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் சான்றிதழுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. நாதஸ்வரம் தவில், தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இதர பிரிவுகளில் சேர ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 வயது முதல் 25 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இசைப் பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி அரசு விடுதி வசதி, மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூபாய் 400, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயண சலுகை ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதற்குப் பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூபாய் 152 செலுத்தினால் போதுமானது.
வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியரை மாணவர்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.