பெரம்பலூர்: குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரும், இயக்குநருமான வ. கெளதமன் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரிடம் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெளதமன், திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு இந்த மண்ணை அழித்ததாகவும், தமிழ்நாட்டு மக்களின் தலையில் 7 லட்சம் கோடி கடனை சுமத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரூ.1000 தருகிறேன், ரூ.1500 தருகிறேன் என்றும்; 6 சிலிண்டர் தருகிறேன் போன்ற ஏற்கமுடியாத வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும், இன்னும் எத்தனை லட்சம் கோடி கடனை தமிழ்நாட்டு மக்களின் தலையில் சுமத்தப் போகிறார்கள் என்றும், சாராயம் விற்று ஆட்சி செய்கிற கூட்டம் என்று விமர்சித்தார்.
எங்களை அடிமைப்படுத்த நினைக்கிற, சாராய ஆலைகளை வைத்து கொள்ளையடிக்கிற கூட்டமான திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் அகற்றவதற்காகவே, தமிழர்களின் உரிமையான ஜல்லிக்கட்டிற்குப் போராடிய நாங்கள் களமிறங்கி உள்ளோம் என்றும் கூறினார்.
மேலும், "தற்போது தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. திமுக, அதிமுக, தேசிய கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து எங்களை எதிர்த்துப் போட்டியிடுகின்ற காலம் வரும்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.11,50,000 பறிமுதல்