கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தில் சக்திவேல் என்ற மாற்றுத்திறனாளி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இரவு சக்திவேல் தனக்குத் தேவையான இன்சுலின் மருந்தை வாங்கித் தரும்படி, தனது தந்தை கண்ணையனை கடைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்போது ரோந்து பணியிலிருந்த ஆலத்தூர் தாசில்தார், காவல் துறையினர் கண்ணையனை திட்டியது மட்டுமின்றி கடையைப் பூட்டி, சீல் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இதில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கண்ணையன், 11ஆம் தேதி இரவு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், கண்ணையன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது, தந்தை இறப்புக்குக் காரணமான அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரின் மாற்றுதிறனாளி மகன் சக்திவேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவைக் கண்டறிய ‘4,000 ரேபிட் டெஸ்ட் கிட்’ - புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர்