பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு எச்ஐவி பாதிப்பை காரணமாகக் காட்டி அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த 10ஆம் தேதி தனது உறவினர்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இப்பிரச்னை குறித்து வழக்கு விசாரணையை மேற்கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் நான்கு வாரங்களில் விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.