பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெருமாள்பாளையம் என்ற குக்கிராமத்தில் வசிக்கின்ற விளிம்பு நிலை மக்கள் தங்குவதற்கு நிரந்தரமாக இடம் வேண்டும் என கடந்த 10 வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்து வருகிறார்கள். முன்னதாக, இந்த கிராம மக்களுக்கு சிறுவலுார் என்கின்ற கிராமத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டா கொடுத்த இடம் இடுகாடு பகுதிக்கு அருகில் இருப்பதால், பெருமாள்பாளையம் மக்கள் குடியேறுவதற்கு சிறுவலுார் கிராம மக்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட ஆட்சியர் இரண்டு தரப்புகளையும் அழைத்து விசாரணை நடத்தினார். பின், இரு தரப்பு மக்களுக்கும் பாதகம் வராமல் இருக்க, 52 குடும்பத்திற்கும் மாற்று இடத்தில் பட்டா கொடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், பட்டா கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காத நிலையில், மீண்டும் 52 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முறையிட்டனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் மாற்று இடம்தான் ஒதுக்கி உள்ளதே, ஏன் இன்னும் பட்டா கொடுக்கப்படவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி, இன்றைக்குள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, வருவாய்த்துறை வட்டாட்சியர் முத்துக்குமார் தலைமையிலான குழு துரிதமாக செயல்பட்டு, 52 குடும்பத்தினருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை தயார் செய்தது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் கூறுகையில், “பொதுமக்கள் ஒவ்வொருவரும் கொடுக்கின்ற மனு வெறும் காகிதம் அல்ல, அவர்களின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். ஒருவரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவது நம் கடமை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா கொடுக்கப்பட்டது.
மேலும், அரசாங்கம் திட்டங்களைப் பயன்படுத்தி சீக்கிரமே வீடு கட்டுவதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கு கடன் உதவி வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மனு கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 10 வருடங்களாக இலவச வீட்டு மனைப்பட்டாவிற்காக போராடி வந்தோம். ஆனால், மாவட்ட ஆட்சித்தலைவர் 8 மணி நேரத்திற்குள் இலவச வீட்டு மனைப்பட்டா கொடுத்து விட்டார்கள் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.
இதையும் படிங்க:போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆர்பி செவிலியர்கள் கைது!