பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இராமாயணப் போரின்போது வாலி இங்கு வந்து ஈஸ்வரனை வழிபட்டதாகவும், அதனால் இந்த கோயிலுக்கு வாலீஸ்வரர் என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கோயிலுக்குச்சென்று திருமண சான்றிதழைக் கேட்டுள்ளார். அப்போது திருமணத்திற்காக கட்டணம் செலுத்துவது குறித்து அர்ச்சகர்களுக்கும், இளைஞர் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நடை சாத்தப்பட்ட பிறகு 12 மணியளவில் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் கேட்டதாகவும், அதற்கு அர்ச்சகர்கள் நடைசாத்தப்பட்டுவிட்டது என்று அனுமதி மறுத்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் கோயிலின் உள்ளிருந்து வெளியே வந்த பக்தர்கள் மட்டும் எவ்வாறு உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பிய இளைஞருக்கும், அர்ச்சகர்கள் தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், அங்கிருந்த மரத்தில் மோதியதில் இளைஞர்கள் தரப்பில் ஒகளூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து ராகவேந்திரன் கொடுத்தப்புகாரின் பேரிலும் கோயில் அர்ச்சகர் செல்லையா மற்றும் குமார், சண்முகம், ராமன் ஆகியோர் தரப்பிலும் கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து மங்களமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சம்பவம் கோயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஊர் நாட்டாமையை எதிர்த்து பேசியவரை காலில் விழவைத்த கொடூரம்