பெரம்பலூர்: பாடாலூர் கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்திற்குப் பின்பகுதியில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஸ்ரீமுத்துமாரியம்மன் என்ற சிறிய கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சுவாமி வழிபாடு செய்வதும், முயல் வேட்டை திருவிழா நடத்துவதும் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக சுவாமி வீதிஉலாவிற்கும் பால்குடம் எடுப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு 10க்கும் மேற்பட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நீதிமன்றம் காவல் துறையினர் இரு சமுதாயத்தினருக்கும் பிரச்னை இல்லாமல், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் சுவாமி ஊர்வலம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) சுவாமி ஊர்வலம் மற்றும் பால்குடம் எடுப்பதற்கு கோயில் தரப்பு சமுதாயத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில் மாற்று தரப்பு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ‘எங்கள் வீதி வழியாக சுவாமி ஊர்வலம் பால்குடம் உள்ளிட்டவை நடைபெறுவதற்கு அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறி 500க்கும் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையில் காவல் துறையினர் பலத்த காவல் பாதுகாப்புடன் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர், காவல் துறையினரின் சமாதான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதனையடுத்து அதே வீதியில் சாரட் வண்டியில் அமர்ந்தவாறு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்ப்புத்தெரிவித்த மாற்றுசமுதாயத்தினர் ஜான்பாண்டியன் மீது செருப்பை வீசியுள்ளனர். அப்போது சுவாமி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தரப்பினர் எதிர் தரப்பு மீது கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு பதற்றம் நிலவியது. ஜான் பாண்டியன் மீது வீசப்பட்ட செருப்பு, சாரட் வண்டியில் பட்டு கீழே விழுந்துவிட்டது.
செருப்பு வீசியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன்(39), சுப்ரமணியின்(42), சின்னசாமி(35) ஆகிய மூவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பாடாலூர் கிராமத்தில் அமைதி நிலவி வருகிறது. இருப்பினும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூரில் களைகட்டிய நெய்தல் கோடை விழா