பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 12 ஆயிரத்து 60 உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா கலந்துகொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து இவ்விழாவில் பேசிய அவர், புதிய உத்வேகத்துடன் இளைஞரணியில் சேர்ந்த உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என்றும், கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோரைப் பற்றி படித்து பகுத்தறிவை வளர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பாரதிய ஜனதா அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற மிகப்பெரிய ஆபத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறது என்றும், இது பாஜக அரசின் 100 ஆண்டுகால கனவு எனவும் உறுப்பினர்களிடையே தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:நாகர்கோவிலில் புதிய கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்காக பயிற்சி முகாம்