சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28இல் தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது.
பெரம்பலூர் 4 ரோடு பகுதியிலிருந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பியாட் ஜோதியினை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஜோதி ஊர்வலமானது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, சங்கு சமீபம், காமராஜர் வளைவு வழியாக எடுத்து வரப்பட்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்று ஜோதிவைக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் செஸ் போன்று அமைக்கப்பட்ட பிரமாண்ட கேக்கினை வெட்டினர். அதனைத்தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்குச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் விழிப்புணர்வு செஸ் ஓவியம் வரைந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கும், செஸ் போட்டிகளை நடத்திய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிலம்பம், இசைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கரகாட்டம், நாட்டுப்புற நடனம், மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெற்றன.
இறுதியாக செஸ் போட்டி குறித்த மஞ்சள் பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் மோடி வருகை - 22 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு