பெரம்பலூரில் இருந்து வி.களத்தூர் செல்லும் அரசு டவுன் பஸ் கடந்த சனிக்கிழமையன்று பெரம்பலூர் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் பக்கவாட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த மலையாளப் பட்டியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் கீழே விழுந்ததில் பேருந்து அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஷேர் ஆட்டோ மோதியதால்தான் அந்த இளைஞர் பேருந்தின் கீழ் விழுந்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விபத்துக்கு காரணமான அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு, பின்னர் உடனடியாக அங்கிருந்து தப்பித்து செல்கிறார்.
இதனிடையே சிசிடிவி வீடியோ தொடர்பாக, பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பழனிவேல் மீது தவறு இல்லை எனவும், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தான் விபத்திற்கு காரணம் எனக் கூறி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனை உயர் அலுவலர்கள் ஓட்டுநர் பழனிவேலை நேற்று இடைநீக்கம் செய்தனர். இதை கண்டித்து இன்று பேருந்துகளை இயக்கப்போவதில்லை என ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.