பெரம்பலூர்: வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் மலையாளபட்டி ஊராட்சியில் 2019-2020ஆம் ஆண்டில் 45 பாறாங்கல் தடுப்பணை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. மூன்று ஓடைகளில் தலா 15 தடுப்பணைகள் வீதம் மொத்தம் 45 தடுப்பணைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு தடுப்பணை திட்ட மதிப்பு 77 ஆயிரம் ரூபாய் வீதம் 45 தடுப்பணைகள் கட்ட 34 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் 45 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறி முழு தொகையும் தனியார் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாறாங்கல் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இதையும் படிங்க: எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3வது நபர்களை வைத்து ஆய்வு செய்வதா? - ஆசிரியர்கள் கொந்தளிப்பு
அவர்கள் விசாரணை செய்ததில் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டிவிட்டு 45 தடுப்பணைகள் கட்டிமுடிக்கப்பட்டதாக கூறி அரசு நிதி 30 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறி அப்போது வேப்பந்தட்டை யூனியனில் ஓவர்சீயராக இருந்த மணிவண்ணன், ஜுனியர் என்ஜீனியர் நாகராஜன், பிடிஓ அறிவழகன் ஆகியோர் மீதும் தனியார் ஒப்பந்ததாரர்கள் துரைசாமி, ராணி, சதீஸ்குமார், வெற்றிவேல் என மொத்தம் 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்தடுப்பு அதிகாரிகள் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்ட 3 அரசு அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்த்தின் கீழ் கூட்டுச்சதி செய்துள்ளனர் என குறிப்பிட்டு நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தனியார் ஒப்பந்ததாரர்கள் 4 பேர் மீது நேர்மையற்ற நோக்கத்துடன் போலியான ஆவணங்கள், பொய்யான பதிவுகளை உருவாக்கி கிரிமினல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Toxic Gas Inhalation: விஷவாயு தாக்கி 3 விவசாயிகள் பலி.. கிணற்றில் இறங்கிய போது நேர்ந்த கொடூரம்!