கரோனா தொற்று பரவலைத் தடுக்க மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள், சிறு, குறு தொழிலாளர்கள், தினசரி கூலிக்கு வேலை செய்வோர் எனப் பலரின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துள்ளது. அந்த வரிசையில், பித்தளைப் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில், ஆலம்பாடி சாலை, எளம்பலூர் சாலை, அன்பு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பித்தளைப் பாத்திரங்கள் தயாரிக்கும் பட்டறைகள் இயங்கிவருகின்றன. சுமார் 10-க்கும் மேற்பட்ட பட்டறைகளில் வேலைசெய்யும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.
இங்குத் தயாரிக்கப்படும் பாத்திரங்கள் திருச்சி, அரியலூர், திட்டக்குடி, பெண்ணாடம், பெரம்பலூர், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படும். ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதால் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
சுபமுகூர்த்த நாள்கள் அதிகம் இருக்கும் இந்த நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தாங்கள் மிகவும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருவதாகவும், மீண்டும் தாங்கள் நல்ல வருவாயை ஈட்ட குறைந்தது 5 முதல் 6 மாதங்கள் ஆகலாம் என, தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுவரை தயாரித்து வைத்துள்ள பித்தளைப் பொருள்கள் அனைத்தும் விற்பனைசெய்ய முடியாத நிலையில், வருமானமின்றி தவிக்கும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
இதையும் படிங்க: ரூ.15 கோடி மதிப்பில் சேலைகள் தேக்கம் - நெசவுத் தொழிலை நசுக்கும் ஊரடங்கு