தேனீக்கள் மட்டும் இந்த உலகில் இருந்து மறைந்துவிட்டால் மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே நாம் தேனீக்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால் தேனீக்கள் போன்று இயங்க வேண்டும் என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர். உழைப்புக்கு முன்னுதாரணமாக இருக்கும் தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்து வருவது வேதனையளிக்கிறது. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கிய பங்காற்றி வருவது தேனீக்கள்தான். தேனீ உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
எனவே தேனீக்களை காக்க வேண்டியது நமது கடமை. தேனீக்களின் வரலாற்றை குறுஞ்செய்தியாக தெரிந்துகொண்டால் நம் வாழ்விற்கு பயனுள்ளதாக இருக்கும். உலகில் ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. அவை, மலைத்தேனீ, இந்தியத் தேனீ, கொம்பு தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ ஆகியவை ஆகும். இவற்றில், இந்திய, இத்தாலி மற்றும் கொடுக்கில்லாத் தேனீ ஆகியவை வீட்டில் வளர்க்கும் தேனீக்களாக உள்ளன. மற்ற தேனீக்கள் காட்டில் வளர்கிறது.
இந்நிலையில், தேனீக்களின் அவசியத்தை புரிந்துகொண்டு மக்களின் நன்மைக்காக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டிலேயே தேனீக்களை வளர்த்து வருகிறார். அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாரதி. முதுகலை பட்டதாரியான இவர் இயற்கை விவசாயத்தில் அதீத பற்றுக்கொண்டவர். இயற்கை முறையில் தேனீ வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இதனால், 2015ஆம் ஆண்டு அரசு மூலம் நடத்தப்படும் தேனி வளர்ப்பு குறித்த பயிற்சியில் கலந்து கொண்டு தற்போது அதனை செயல்படுத்தி வருகிறார். ஆரம்பக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக இரண்டு பெட்டிகளில் மட்டும் தேனீக்களை வளர்த்து வந்தவர் நாளைடவைில் அதனையே லாபகரமான தொழிலாக மாற்றிக்கொண்டு நல்ல முறையில் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.
இந்த நான்கு வருடங்களில் தேனி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பாரதி, தனது வீட்டை சுற்றி எட்டுப் பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து வருகிறார். இதில் மூன்று அல்லது நான்கு மாத காலங்களில் இவர் வளர்க்கும் தேனீக்கள் மூலம் 2 கிலோ வரை தேன் கிடைக்கின்றது. இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூலை பெற்று அறுவடை செய்வதுபோல், தேனீக்களை வளர்த்து ஆரோக்கியமான தேனை பெற்று விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேன் வளர்ப்பு குறித்து பாரதி கூறுகையில், வீட்டைச் சுற்றி எட்டு பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து வருகிறேன். சிறுவாச்சூரில் அமைந்துள்ள எங்களது தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பெட்டிகளில் தேனீக்கள் வளர்ந்து வருகிறது. ஒரு கிலோ தேன் ரூபாய் 700 வரை விற்பனையாவது மன மகிழ்வைத் தருகிறது.'தேன் விற்பனை மூலம் பெறப்படும் வருமானம் எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இதனை நினைத்து பார்க்கையில் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். .
இயற்கையான முறையில் கிடைக்கும் இந்த தேன் ஒரு அற்புதமான அருமருந்தாக இருக்கிறது. உடலுக்கு வலிமை தரும் வகையில் இயற்கையான முறையில் சேகரிக்கப்டும் தேனை பெரம்பலூர் நகர்ப்புற மக்கள் வீடுதேடி வந்து வாங்கி செல்கின்றனர்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் உணவுத் தர கட்டுப்பாட்டு நிறுவனமான எஃப்எஸ்எஸ்ஏ நிறுவனம் மூலம் சான்று பெற்று நகர்ப்புற பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தேனை விற்பனை செய்து வருகிறேன். ஆரம்பகாலத்தில் பொழுதுபோக்காக தொடங்கப்பட்ட இந்த தேனீ வளர்ப்பு தற்போது லாபகரமான வியாபாரமாக மாறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் சந்தைகளில் விற்பனையை தொடங்கியுள்ள அவர் அக்மார்க் முத்திரையுடன் வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்வதே தனது லட்சியம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அதிர்ச்சி வீடியோ !