விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 61 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் 50 சதவிகிதத்திற்கு மேல் பயிர்கள் சேதம் அடைந்து மிக குறைந்த அளவிலான மகசூல் பெறப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதி வழங்கக்கோரி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது மக்காச்சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த 64 ஆயிரத்து 569 விவசாயிகளுக்கு ரூ.32 கோடியே 16 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இதய சாந்தா தகவல் தெரிவித்துள்ளார்.