தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் இரா.குமார் வரவேற்றார். இதில், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரங்கராஜன் தலைமையில் 16 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பணிக்காலத்தில் மரணமடைந்தால், அவர்களது சேவையை நினைவூட்டும் விதமாக அவருடைய குடும்பத்தாருக்கு வட்டார அல்லது மாவட்ட அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் இயக்கச் சார்பான குடும்ப நல நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக உயர் நீதிமன்றத்தில் மாநில அமைப்பு வழக்கு தொடர வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கும் சட்ட ரீதியாக பணிப்பாதுகாப்பு வழங்கிட தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் நீண்ட கால இலக்குகளை அடைய மாநில அளவில் மாபெரும் மாநாடு நடத்த வேண்டும். அதைத் தொடர்ந்து சென்னையில் 9 ஆவது மாநில மாநாட்டை நடத்த வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், மாநில பொருளாளர் கதிரவன் நன்றி கூறினார்.