பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரனாரை கிராமத்தில் பகுதி நேர நூலகம் இன்று திறக்கப்பட்டது. இந்தப் பகுதி நேர நூலகத்தை குன்னம் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான ராமச்சந்திரன் திறந்துவைத்தார். பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கு ஏற்றினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய ராமச்சந்திரன், "ஏழை கிராம மக்களை சந்திக்கக்கூடிய நபராகக் கூறுகிறேன். மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். ஆனால் இந்தித் திணிப்பை எப்போதும் எதிர்ப்பேன். இந்த மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் அரசுப் பள்ளியில் படிக்கக் கூடிய ஏழை பள்ளி மாணவ-மாணவியர் பாதிக்கப்படுவர்.
மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை மறுத்துப் பேசும் ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் பள்ளி மாணவ-மாணவியருக்கு இழைக்கக்கூடிய அநீதியாகத்தான் நான் பார்க்கிறேன்" என்றார்.
இருமொழிக்கொள்கையே தங்களின் உறுதியான நிலைப்பாடு என அதிமுக அரசு கூறிவரும் நிலையில், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவளித்திருப்பது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.