பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்திப் பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில், பஞ்சபாண்டவர்கள் பூஜித்து வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்பு பெற்றுள்ளது. இக்கோயில் முன்பு 40 அடி உயர கல்தூணில் ஆஞ்சநேயர் உருவம் பொறிக்கப்பட்டு கம்பத்தடி ஆஞ்சநேயர் சன்னதியாக விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி 18 அன்று திருச்சி காவிரியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து 60 கிலோமீட்டர் நடை பயணமாக வந்து கம்பத்தடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். 60 ஆண்டு காலமாக தொன்று தொட்டு நடந்து வரும் ஆடி 18 தீர்த்தக்குட அபிஷேகம் என்பது இக்கோயிலில் சிறப்பு விழாவாக நடைபெறும்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. அதனடிப்படையில் வருகிற 2.8.2020 அன்று நடைபெறும் ஆடி 18 அபிஷேக விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.