பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரைராஜ். இவருக்கு செட்டிகுளம் கிராமத்தில் இருந்து மாவிலிங்கை செல்லும் சாலையில் அம்மா குளம் அருகில் விவசாய நிலம் உள்ளது. இவர் தனது நிலத்தில் பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை பாதுகாப்பாக வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை (நவ.28 ) துரைராஜ் வயலுக்கு வந்து பார்க்கும் போது சுமார் 400 கிலோ கொண்ட சின்ன வெங்காயம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல் ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து சின்ன வெங்காயம் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இதனால் சின்ன வெங்காயம் பட்டறை வைத்துள்ள விவசாயிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிகுளம், பாடாலூர் , ஆலத்தூர், சத்திரமனை, எசனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்தப் பயிர்களை விவசாயிகள் தங்களது வயலில் பட்டறை போட்டு பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளாக போலிச் சான்றிதழ்கள்; சிக்கிய கும்பல்!