பெரம்பலூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி, தீரன் நகர் பணிமனை அரசு பேருந்து, நேற்று மாலை சென்னை சென்று விட்டு மீண்டும் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை திருச்சி லால்குடி அருகே பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள அயப்பநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் நடத்துனராக இருந்தார். அத்துடன், பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணித்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை29) இரவு 11.30 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புறப்பட்ட அந்த பேருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே சின்னாறு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் அசுர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கிய நிலையில், ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துனர் முருகன் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற மங்களமேடு போலீசார், பொதுமக்களுடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஓட்டுனர் மேற்றும் நடத்துனரின் உடல்களை பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெருங்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!