உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பலர் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுமானம், கிரஷர் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், வேலை இல்லாமல் புலம்பெயர்ந்த இந்தத் தொழிலாளர்கள் வருமானமின்றியும், உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டனர். இதையடுத்து அவர்கள், தங்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைபேரில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 130 தொழிலாளர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி தலைமையிலான டாக்டர்கள், மருத்துவ பரிசோதனை செய்து, பின் அங்கிருந்து அவர்கள் பேருந்து மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் திருச்சியிலிருந்து அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயிலில் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: தப்பிச்செல்ல முயன்ற வெளிமாநில தொழிலாளர்களை மீட்ட சென்னை மாநகராட்சி!