நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேவுள்ள காவேரி நகர் பகுதியில், கடந்த ஒரு வாரமாக மூன்று குரங்குகள் சுற்றித் திரிந்துள்ளன. இதில் இரண்டு குரங்குகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் ஒரு குரங்கு மட்டும் அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் உள்ள உணவுகளை சாப்பிட்டு வசித்து வந்தது.
இந்நிலையில், இன்று ( அக். 3 ) உயரமான கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு தாவ முயன்றபோது குரங்கு எதிர்பாராதவிதமாக மின்சாரக் கம்பியில் சிக்கியது. இதில் வயிற்று பகுதியிலும், இடது கையிலும் பலத்த காயமடைந்து அக்குரங்கு உயிருக்குப் போராடியது.
இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக மின்சார வாரிய ஊழியர்கள் மூலம் மின்சாரத்தை துண்டித்து குரங்கை மீட்டனர். பலத்த காயமடைந்து மயக்க நிலையிலிருந்த குரங்கை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.
உடல்நிலை தேறிய பின்னர் குரங்குக்கு உணவுப்பொருள்களை வழங்கிய இளைஞர்கள், வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுச் சென்றனர். காயமடைந்த குரங்கை மீட்டு சிகிச்சையளித்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு பிளேட் பாம்புக்கறி பார்சல்: பாம்புக்கறி தின்னும் இளைஞர்கள்!