நாமக்கல்: இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தாயையும், தாயுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த நபரையும் காவலர்கள் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த நல்லூர் வாழ்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராணி. இவர் தனது மகன் தங்கராசு (22) உடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு சுப்பிரமணி என்பவருடன் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது.
நேற்று இரவு 11 மணிக்கு தங்கராசு மது அருந்திவிட்டு, ராணி, சுப்பிரமணி ஆகியோரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை வீட்டின் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தங்கராசு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள், நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார், தங்கராசு உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொலை நடந்த அன்று ராணி பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் வாங்கி வந்ததும், அதனை தங்கராசு கேட்டு ராணி, சுப்பிரமணி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். எனவே, அவர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது, எனவே இருவரையும் தேடிவருகின்றனர்.