நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் மதியம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். கூலி தொழிலாளியான இவருக்கு தீபன் (11), சஞ்சய் (09) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம்பட்டி அருகேயுள்ள கிணற்றில் தனது மகன்கள் இருவரையும் அழைத்துச் சென்று நீச்சல் பயிற்சி அளித்துள்ளார் அய்யனார். எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் இரு மகன்களுக்கும் நீச்சல் கற்றுக்கொடுக்கும் போது, எதிர்பாராதவிதமாக திடீரென்று மூத்த மகன் தீபன் நீரில் மூழ்கும்போவது அறிந்து அய்யனார் மகனை காப்பாற்ற முயற்சித்தார்.
மற்றொரு பக்கம் தனது இரண்டாவது மகனும் நீரில் மூழ்கி கொண்டிருந்ததை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இளையமகன் சஞ்சய்யை காப்பாற்றினார். அதற்குள் மூத்தமகன் தீபன் 60 அடி ஆழ கிணற்றில் மூழ்கிவிட்டான்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூர் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீபன் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி ரூ. 3.46 லட்சம் பணம் கொள்ளை: மூவர் கைது!