நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால், தற்போது தனது இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் ராமசாமி வசித்து வருகிறார்.
கடந்த இரண்டு மாதமாக ராமசாமிக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் ராமசாமிக்கு என்ன நோய் என்று சொல்லாமலேயே அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். மேலும், ராமசாமியின் வீட்டு முதலாளி அவர் வசித்த வீட்டையும் காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து, நோயால் பாதிக்கப்பட்ட ராமசாமி, வாழ வழியின்றி தனது பிள்ளைகளுடன் சுடுகாட்டில் குடியேறியுள்ளார். தினச் செலவுக்கு ராமசாமியின் குழந்தைகள் ஓட்டலுக்கு வேலைக்குச் செல்கின்றனர். தாயையும் இழந்து, படுத்த படுக்கையாக கிடக்கும் தந்தையுடன், மூன்று பிள்ளைகள் சுடுகாட்டில் வசிப்பது அப்பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ராமசாமியை மீட்டு நடமாடும் மருத்துவமனை மூலம் உரிய சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்ற வேண்டும். மேலும் தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.