நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை ரப்பளீஸ்வரர் கோயில், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, மாசிலா அருவியானது அனைவரையும் கவரும் இடமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பல மாதங்களாக வறண்டு கிடந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். தொடர் விடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு மாசிலா அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.