நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஒன்று கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து செங்கப்பள்ளி, பெரிய கரசம்பாளையம், மேல்பாலப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக தற்போதுவரை இந்தத் தண்ணீர்த் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், நீர்த்தேக்கத் தொட்டி கட்டி 30 ஆண்டுகள் ஆகிய நிலையில் தண்ணீர்த் தொட்டியைத் தாங்கி நிற்கக்கூடிய தூண்கள், படிக்கட்டுகள் ஆகியவை சேதமடைந்து காணப்படுகின்றன. தண்ணீர்த் தொட்டி அருகே அரசுப் பள்ளி இருப்பதால் எவ்விதமான அசம்பாவிதங்களும் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியினை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.