ஹாலோபிளாக் கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட சுவர். ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் வேய்ந்த கூரை. அத்தியாவசிய பொருள்கள் தவிர ஆடம்பர பொருள்கள் இல்லாத வீடு. சமையலுக்குத் தனி அறை இல்லை.
சமைப்பதும் விறகு அடுப்பில் தான். கோனூர் கிராமத்தில் பாஜக கொடி பறக்கும் இத்தகைய வீடுதான் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகனின் பூர்விக வீடு என்றால் நம்ப முடிகிறதா?
மகன் ஒன்றிய அமைச்சர், பெற்றோர் விவசாய கூலிகள். சைரன் காரில் போலீஸ் பாதுகாப்புடன் பறக்கும் மகன். சைக்கிள் கேரியரில் மண்வெட்டியோடு வேலைக்குச் செல்லும் தந்தை. போகும் இடமெல்லாம் மகனுக்குப் பொன்னாடைதான். பெற்றோரின் கையிலோ கழுத்திலோ பொன் நகை இல்லை.
வெள்ளந்தி மனிதர்கள்
மகனின் பெருமையை ஊரே புகழ்பாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் பெற்றோர் லோகநாதனும் வருதம்மாளும் இதுவே எங்களுக்குப் போதும் என்று எளிமையாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மகன் அடைந்திருக்கும் உயரத்தின் ‘கனம்’கூடத் தெரியாமல், வெள்ளந்தியாகப் பேசிச் சிரிக்கிறார்கள்.
"மகன் தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது என்று போனில் சொன்னார். அது என்ன பதவின்னுகூட எங்களுக்குத் தெரியலை. ஏதோ பெரிய பதவின்னு மட்டும் உணர்ந்தோம். எங்களுக்குப் பூரிப்பா இருந்துச்சு. பெத்தவங்களுக்கு வேற என்ன பெருமை வேண்டும்" என்று புன்னகை விரிக்கிறார் எல். முருகனின் தாயார் வருதம்மாள்.
நாலு சுவருக்குள் வாழ்க்கையா?
நீங்கள் வயல் வேலைக்கெல்லாம் போக வேண்டாம். எங்களோடு வந்து சென்னையில் இருங்கன்னு மகன் எல். முருகன் சொன்னதை, மறுக்க முடியாமல் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வந்து தங்குவதாக வாக்களித்துள்ளார்கள். வாய்க்கால், வரப்பென்று சுற்றிய உடம்பை, நாலு சுவருக்குள் சும்மா சாய்ப்பது அத்தனை எளிதல்லவே.
இன்னமும் கூலி வேலைக்குப் போறீங்களா என்று கேட்டோம். மகன் தனது திறமையாலும் உழைப்பாலும் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார். கை, கால் நல்லா இருக்குற வரைக்கும் நாங்க உழைக்க நினைக்கிறோம்.
'உழைப்போம் - அதுதான் திருப்தி'
அவர் அமைச்சரானதனால, எங்களோட உழைக்கும் குணத்தை மாத்திக்க முடியுமா? என்று கேள்வி எழுப்புகின்றனர். மணக்க மணக்க கொங்கு மொழியில் பேசி மகிழும் இவர்களின் வெள்ளந்தி குணம் நெகிழ்வை ஏற்படுத்துகிறது.
சிறிய கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, முட்டி மோதி ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் எல். முருகன் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்று கோனூர் மக்கள் மெச்சுகின்றனர். இதோ அவர் படித்த பள்ளியென்று அவர்கள் காட்டுகையில் அந்தப் பள்ளியும் அவரின் புகழைப் பாடுவதுவாகவே உணர்ந்தோம்.
இதையும் படிங்க: பயோடேட்டா சர்ச்சை: கொங்குநாடு குறித்து விளக்கமளித்த எல். முருகன்