காவல் துறையினர், மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் போலவே, இருசக்கர வாகன பழுதுநீக்கும் (மெக்கானிக்) தொழிலாளிகளும் 24 மணிநேரமும் அலர்ட்டாக இருப்பார்கள். நள்ளிரவில் அழைத்து வாகனம் பழுது என்று கூறினால்கூட, மறுக்காமல் வந்து உதவுவார்கள்.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு, அவர்களை வாடிக்கையாளர்களின் அழைப்புகளை நிராகரிக்கும் சூழலுக்குத் தள்ளியிருக்கிறது. காவல் துறையின் கெடுபிடி, கரோனா குறித்த அச்சம் உள்ளிட்ட காரணங்கள் இருசக்கர பழுது நீக்குபவர்களை, வாடிக்கையாளர்களிடமிருந்து விலகியிருக்கவைத்திருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு இருச்சக்கர வாகனம் பழுதுநீக்குவோர் சங்கத்தின் இளைஞரணித் தலைவர் ரவிக்குமார், “ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதலாகவே, வீட்டில் முடங்கியிருக்கிறோம். இதனால், எங்கள் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுகிறது.
அவசரம் என வாடிக்கையாளர்கள் அழைக்கும்போது, எங்களால் நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. காவல் துறையினர் அனுமதிப்பதில்லை. குறிப்பாக, எங்கள் தொழில் கூட்டமாகச் செய்யும் பணி அல்ல.
பெரும்பாலும் இருவர் மட்டுமே பணியாற்றிவருவதால், எங்களால் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற முடியும். அரசு எங்களுக்கும், எங்கள் தொழிலுக்கும், விலக்கு அளித்தால் உதவியாக இருக்கும்” என்றார்.
இது குறித்து இருசக்கர வாகன பழுது நீக்குபவரான வினோத் கூறுகையில், “ஐந்து வருடங்களாக பைக் மெக்கானிக் பட்டறை வைத்திருக்கிறேன். இப்படியொரு பாதிப்பு இதற்கு முன் வந்தது கிடையாது. அத்தியாவசிய பொருள்களை வாங்கிவருவோர், வாகனப் பழுது என அழைத்தால்கூட போக முடியவில்லை.
காவல் துறையினரின் அனுமதி கிடைக்காமல், வாடிக்கையாளர்களை இழக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மீதான நன்மதிப்பு குறைகிறது. ஊரடங்கைத் தளர்த்தினாலும், அந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் தொடர்புகொள்ள வாய்ப்பு குறைகிறது.
தமிழ்நாடு அரசு கொடுத்த உதவித்தொகை, உணவிற்கே போதவில்லை. இதில், வீட்டு வாடகை, வங்கிக்கடன் வேறு நிலுவையிலிருக்கிறது. அரசு இதற்கு விரைவில் தீர்வுகாண வேண்டும், எங்களைப் போன்றோரின் வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும்” என்கிறார்.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றால், வாகன உற்பத்தி, அதன் விற்பனை ஏற்கனவே குறைந்தது. இந்நிலையில், கரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, அதிகளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நெருக்கடியில், மெக்கானிக்குகளின் வாழ்வாதாரமும் அதலபாதாளத்திற்குச் செல்லும் வாய்ப்புள்ளது. இதனை அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என்பதே, அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க: 'இல்லாதவங்களுக்கு உதவுங்க சாமி...!' - குடிசைகளின் குரல்களுக்கு செவிசாய்க்குமா அரசு?