நாமக்கல்: பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஜேடர்பாளையத்தில் நேற்று முந்தினம் (மே.11) இரவு வடகரை ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்து தீ பிடித்து எரிவதைக் கண்ட பள்ளியின் காவலாளி, அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்.
இந்த தீ விபத்தில் ஒரு பள்ளி வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. இரண்டு வாகனங்கள் லேசான சேதாரத்துடன் மீட்கப்பட்டன. பின்னர், இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வாகனங்கள் மின்கசிவால் தீப்பற்றி இருக்கும் என முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜேடர்பாளையத்தில் உள்ள குளத்தில் நேற்று மாலை திடீரென மீன்கள் செத்து மிதந்தன. திடீரென இவ்வாறு நிகழ்ந்ததால், குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி பட்டதாரி பெண் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது பாலியல் வன்கொடுமை செய்து கொடுரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என கூறி ஒரு சமூகத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது இது இரு சமூகத்தினரிடையே மோதலாக வெடித்துள்ளது.
இந்த இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக வெல்லம் தயாரிக்கும் ஆலக்கொட்டகை மற்றும் ஆலக்கொட்டகையில் தங்கியிருக்கும் வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்புகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. அதற்கு மாறாக மற்றொரு சமூகத்தினரைச் சேர்ந்தவர்கள் ஆலக்கொட்டகை மற்றும் அவர்களைச் சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது எனத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
தற்போது பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்ததும், குளத்தில் மீன்கள் இறந்து கிடந்ததும் இவர்களால் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஜேடர்பாளையம் பகுதியில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய ராசிபலன்