நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்கள் இருவர் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை சுற்றிவளைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாதுஷா (32), திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த முத்துக்குமார் (26) என்பதும், கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் உள்ள இரண்டு நபர்கள் நாமக்கல் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வரவுள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த இருவருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க தாங்கள் பட்டா கத்தியுடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும் வேறு காரணங்களுக்காக கொலை செய்யும் நோக்கில் பட்டா கத்தியுடன் இருந்தார்களா என்ற கோணத்தில் இருவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க... சென்னையில் பட்டாக்கத்தி உருவாக்கிய 5 பேர் கைது