ஒரு இளைஞரின் குரல், அரசியல் நிர்ணய சபையில் நேருவுக்கு ஆதரவாக ஓங்கி ஒலித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த 27வயது இளைஞர், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்னும் நேருவின் தீர்மானத்தை வழிமொழிந்து பேசினார். அவரின் கன்னிப் பேச்சு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, தீர்மானம் வெற்றியடைந்தது. அந்த துடிப்பான இளைஞர் வேறு யாருமல்ல முத்துநல்லி காளியண்ணன்.
ஜமீன் குடும்பத்தில் பிறந்தவரென்றாலும், மாணவப் பருவத்திலேயே காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கல்லூரியில் இருந்து விலக்கப்பட்ட காளியண்ணன் அன்றைய சேலம் மாவட்டதில் இருந்த அக்கரைப்பட்டி கிராமத்தில் முத்து நல்லி - பாப்பாயம்மாள் தம்பதிக்கு 10-01-1921 ம் ஆண்டு மகனாக பிறந்தவர். பள்ளிப் படிப்பை திருச்செங்கோட்டில் முடித்து, சென்னை லொயோலா கல்லூரியில் சேர்ந்தார்.
கல்லூரி முதல்வரின் உதவி:
சுதந்திர போராட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டதற்காக, அப்போதைய கல்லூரி முதல்வர் அருட்திரு ஜெரோம் டி சூசா அவர்களால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். மங்களூரைச் சேர்ந்த டிசூசா, லொயோலா கல்லூரியின் முதல்வராக பதவிவகித்த முதல் இந்தியர் ஆவார்.
“நீ என்ன வேண்டும் என்றாலும் செய்... படிப்பைத் தவிர. இதற்கு மேலும் உன்னை இங்கு வைத்துக்கொள்ள முடியாது”,” என்று டிசூசா கூற, “விரும்புவதை செய்து கற்றுக்கொள்ளவே வந்தோம்,” என பதிலிருத்திருக்கிறார். ஆனால், மாணவன்மேல் கொண்ட அன்பால், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர உதவி செய்தார். பின்னர் இருவரும் அரசியல் நிர்னய சபையில் ஒன்றாக பங்கேற்றது வரலாறு!
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்பு
காந்தியின் மீது கொண்ட ஆர்வம், அவரை அவரது கல்லூரித் தோழர்களுடன் வார்தாவுக்கு இட்டுச் சென்றது. இரயில் பயனம்தான். அண்ணலின் ஆசிரமத்தில் தங்கி, அவருடன் அதிகாலை நடை பயிற்சி, கூட்டு வழிபாடு, கூட்டு வாழ்க்கை என இருந்தபோதும், காந்தியுடன் நேரில் உரையாடும் ஆவல் மிகுந்திருந்தது. காந்தியின் செயலர் மஹாதேவ் தேசாய் வழியாக அந்த நல் வாய்ப்பும் கிட்டியது! சென்னைப் பல்கலைக்கழக துனைவேந்தரை எதிர்த்துப் போராட அண்ணலின் அனுமதியை வேண்ட, அவர் மறுத்துவிட்டார். கல்வியில் கவனம் செலுத்தி, கல்லூரிப் படிப்பை சிறப்பாக நிறைவு செய்யுமாறு காந்தி அவர்களுக்கு அறிவுறுத்தினார். படிப்பு முடிந்த பின்னர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, வேலூர் சிறையில் தியாகி திருச்சி அருணாசலத்துடன் ஆறு மாதங்கள் இருந்தார்.
ஜமீன் வாரிசு காளியண்ணன்:
காளியண்ணன் ஜமீன் வாரிசானது ஒரு சுவராசியமான ஒன்று. குமாரமங்கலத்தைச் சேர்ந்த தந்தை வழி அத்தைக்கு ஆண் வாரிசு இல்லாததால், இவரை தத்து எடுத்துக் கொண்டனர். இவரது ஒன்றுவிட்ட அண்ணன் பி சுப்பராயன் 1926 முதல் 1930 வரை சென்னை மாகானத்தின் முதல்வராக இருந்தவர். பின்னர், நேருவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் அரசியல் நிர்னய சபை உறுப்பினராகவும் இருந்த அவர், இந்தோனேசியாவுக்கு இந்திய தூதராக நியமிக்கப்பட்டதால், காமராஜரின் ஆதரவுடன், காளியண்ணன் எம்பி ஆகவும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் ஆனார்.
இவரும் ஆந்திராவைச் சேர்ந்த சஞ்சீவையாவும் தான் அரசியல் நிர்னய சபையில் இளைஞர்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சீவையா பின்னாளில் ஆந்திர முதல்வரானார். இருவரும், மூன்று நாட்கள் சபையின் மதிய அமர்விற்கு மட்டம் தட்டி தலை நகர் டெல்லியை சுற்றிப்பார்க்கலாயினர். இதனக் கவனித்த இராஜாஜி, “என்ன ஆயிற்று? ஏன் மதிய அமர்வில் காணோம்?” என்று முறைக்க, இருவரும் ஊர் சுற்றுவதைக் கைவிட்டனர். அம்பேத்கர், நேரு, பட்டேல் ஆகிய தேசத் தலைவர்களின் விவாதங்கள், அவர்களி அருகிருந்து பார்த்ததை இறுதி நாட்கள் வரை பெருமிதத்துடன் பகிர்ந்து வந்தார்.
காந்தியுடன் கழித்த நாள்கள்:
காந்தியுடன் கழித்த நாட்களை வாழ்வில் கிடைத்த பாக்கியமாக சிலாகித்துப் பேசுவார். அவரது காந்தியப் பார்வையில், காஷ்மீருக்கான 370 சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியன அரசியல் பிழைகளாகும். அரசியல் வாழ்க்கையில், சேலம் ஜில்லா போர்டு மெம்பெர் ஆக பணியாற்றியபோது 2 ஆயிரம் அரசு பள்ளிகளையும் 300 நூலகங்களையும் திறந்து வைத்த பெருமை iவருக்கு உண்டு. காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர், தற்போது வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வந்தார். ஒவ்வொரு சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் தவறாது தனது வாக்கினை பதிவு செய்து விடுவார். மிக பெரிய ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தபோதும் தமிழக சட்டசபையில் ஜமீன் ஒழிப்பு முறைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்தார். ஆந்திர முன்னாள் முதல்வர் சஞ்சீவியய்யாவுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டார்.
திருச்செங்கோட்டில் கண்ணகிக்கு கோவில் எழுப்பும் இவரது பேரவா நிறைவேறாத ஒன்று. வயது மூப்பின் காரணமாக திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகவே உள்ளது.